×

தீவுத்திடலில் நடைபெற்று வரும் கண்காட்சி இன்றுடன் நிறைவு

சென்னை, மே 21: தீவுத்திடலில் நடைபெற்று வரும் கைவினை மற்றும் உணவு திருவிழா (சென்னை விழா) இன்றுடன் நிறைவு பெறுகிறது. சென்னை தீவுத்திடலில் தமிழக சுற்றுலாத் துறை சார்பில் சென்னை விழா எனப்படும் சர்வதேச கைத்தறி, கைவினைப் பொருட்கள் மற்றும் உணவுத் திருவிழா ஏப்ரல் 28ம் தேதி தொடங்கியது. தமிழ்நாடு கைத்தறி நெசவாளர்கள், கைவினைக் கலைஞர்கள் பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழாவில், அவர்கள் உற்பத்தி செய்த துணி வகைகள், பட்டுச் சேலைகள், கோ-ஆப்டெக்ஸ் துணி வகைகள், பூம்புகார் கைவினைப் பொருட்கள் ஆகியவை 70 அரங்கங்களில் இடம் பெற்றுள்ளன.

மகளிர் சுய உதவிக்குழுவினரின் உற்பத்தி பொருட்கள் 75 அரங்கங்களில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. மேலும், 10 வெளிநாடுகளைச் சேர்ந்த கலைப் பொருட்கள் 30 அரங்கங்களிலும், 20 வெளி மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள், நெசவாளர்களின் படைப்புகள் 83 அரங்கங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. பல்வேறு உணவு வகைகள் கொண்ட அரங்குகள் என மொத்தம் 311 அரங்கங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. சென்னை விழாவில் காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம், பட்டு சேலைகள், சேலம் வெண்பட்டு வேட்டிகள், தூய ஜரிகை சேலைகள் மற்றும் ஓவியங்கள், மரவேலைப்பாடுகள், மகளிர் அணிகலன்கள், இயற்கை மூலிகை பொருட்கள், சிப்பிகளால் தயாரிக்கப்பட்ட கலை பொருட்கள், துணிப்பைகள், தஞ்சாவூர் ஓவியங்கள், மரச்சிற்பங்கள், பத்தமடை பாய் உள்பட ஏராளமான தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை விழா தினமும் காலை 11 மணிக்கு தொடங்கி, இரவு 10 மணி வரை நடைபெற்று வருகிறது. இதுவரை 68 ஆயிரம் பேர் இந்த விழாவில் பங்கேற்று அரங்கங்களைப் பார்வையிட்டுள்ளனர். இந்த விழா இன்றுடன் (21ம் தேதி) நிறைவு பெறுகிறது.

The post தீவுத்திடலில் நடைபெற்று வரும் கண்காட்சி இன்றுடன் நிறைவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Craft and Food Festival ,Chennai Festival ,Island ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...